பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை நினைவுகூரும் வகையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் ‘சேவா ஜோதி’ பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது. பேரணியில் பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவர் சக்திவேல், சேவா ஜோதியை ஏந்தியபடி முன்னிலை வகித்தார்.
தேசியக்கொடிகள் மற்றும் பாஜக கொடிகளை கைகளில் ஏந்தியபடி பாஜக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பொதுவாழ்க்கைப் பயணம், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சமூக சேவைகளை விளக்கும் பதாகைகளும் பேரணியில் இடம்பெற்றிருந்தன.
பிரதமர் நரேந்திர மோடியின் நீண்டகால பொதுவாழ்க்கைப் பயணத்தை நினைவு கூருவதுடன், மக்கள் நலன், சமூக சேவை மற்றும் நாட்டின் வளர்ச்சியில் பொதுமக்களின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்தியாவின் சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்கை அடைய, ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற கருத்தும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
பேரணியில் பாஜக தேசிய செயலாளர் மா. வெங்கடேசன், மீனவர் அணி மாநிலத் தலைவர் சீமா பாலு, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் ஆர். சித்ராங்கதன், வடக்கு மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏ.எம். ராஜேஷ், ஆறுமுகம், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், இசக்கிமுத்து, காளிராஜா, மாசானம், சண்முகசுந்தரம், வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வீரா மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.