தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க, எப்.சி.ஐ. குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை ரூ.53.70 கோடி மதிப்பீட்டில் 7.5 கிலோமீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வரும் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் மேயர் ஜெகன் பெரியசாமி, பக்கிள் ஓடை திரேஸ்புரம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ஓடை அகலப்படுத்தும் பணிகள் மற்றும் நீரோட்டத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
2006-ல் தொடங்கப்பட்ட பக்கிள் ஓடை திட்டம்
கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தலைமையிலும், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலிலும், தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பக்கிள் ஓடை திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 2008-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பெய்யும் தொடர் கனமழையால் உருவாகும் வெள்ளநீர், மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடை வழியாகக் கடலுக்குச் செல்கிறது. ஆனால், ஓடையின் அகலம் குறைவாக இருந்ததால், அதிக அளவில் வரும் மழைநீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, 2015 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் பெய்த தொடர் கனமழையின்போது, மழைநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மழை வெள்ளப் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட முதல்வர்
கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது, தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, ராம்நகர், பிரையண்ட் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், நேரில் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
அதன்பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நான் மேயராகப் பொறுப்பேற்ற பின்னர், தூத்துக்குடி மாநகராட்சியில் எதிர்காலத்தில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான திட்டங்களைத் தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அதன்படி, மழைநீர் தேங்கிப் பாதிப்புகளை ஏற்படுத்திய பகுதிகளில் புதிதாக 14 நீர்வழித்தடங்கள் உருவாக்கப் பட்டு, மழைநீர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
40 நாட்கள் தேங்கிய மழைநீர்; 10 நாட்களில் இயல்பு நிலை!
2023-ம் ஆண்டு பெய்த வரலாறு காணாத கனமழையின்போது, மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சுமார் 40 நாட்கள் வரை மழைநீர் தேங்கியிருந்தது. ஆனால், புதிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்பட்டதுடன், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளின் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 10 நாட்களுக்குள் இயல்பு நிலை திரும்பும் சூழல் உருவாக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் இதுபோன்ற மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கும், மழைநீர் விரைவாகக் கடலுக்குச் செல்வதற்கும் பக்கிள் ஓடையை மேலும் அகலப்படுத்தி மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.
7.5 கி.மீ. தூரத்துக்கு ரூ.53.70 கோடியில் விரிவாக்கம்
இதன்படி, எப்.சி.ஐ. குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை 7.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பக்கிள் ஓடையின் அகலத்தை கூடுதலாக 5 மீட்டர் வரை அதிகரித்து மேம்படுத்துவதற்காக ரூ.53 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கப் பணிகள் கடந்த ஜனவரி 2026-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன.
பணிகள் நடைபெறும் சில பகுதிகளில் குடிநீர்க் குழாய்கள் மற்றும் மின்மாற்றிகள் இருப்பதால், அவற்றைச் சீரமைத்தும், தேவையான மாற்றங்களை மேற்கொண்டும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைய அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆகும். பணிகள் நிறைவடைந்த பின்னர், கனமழையின்போது அதிக அளவில் வரும் மழைநீரை பக்கிள் ஓடை வழியாக விரைவாகக் கடலுக்குக் கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், 30 சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை பெய்தாலும் மாநகராட்சிப் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
வெளிப்புறப் பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் செல்லும் வழித்தடங்களில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றவும், மேட்டுப்பட்டி மற்றும் திரேஸ்புரம் கடற்கரை முகப்புப் பகுதிகளில் நீரோட்டத்துக்குத் தடையாக உள்ள கழிவுகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழைக்காலம் என்பதால் நீர்வழித்தடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மாநகராட்சிப் பொறியாளர் (திட்டம்) சலாரி அப்துல் நாசர், உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, வட்டச் செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.