தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில், புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு பிரம்மாண்டமான மிளகாய் வற்றல் மஹா யாகம், 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இங்கு ஸ்ரீமஹா பிரத்தியங் கிராதேவி மற்றும் ஸ்ரீமஹா காலபைரவர் ஆலயங்கள் அமைந்துள்ளன. ஆன்மிகச் சிறப்பு பெற்ற இவ்வாலயத்தில், பக்தர்களின் கடன் தொல்லைகள், எதிரிகளால் ஏற்படும் இடையூறுகள் நீங்கவும், இல்லத்தில் செல்வ வளம் பெருகவும், நோயற்ற நல்வாழ்வு கிடைக்கவும், தொழில் விருத்தியடையவும், பருவமழை பெய்து விவசாயம் செழிக்கவும் வேண்டி சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றன.
ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் இந்த வழிபாடுகள் நடைபெற்றன. காலை 9.10 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி ஹோமம் மற்றும் காலபைரவர் ஹோமத்துடன் யாகத்திற்கான வழிபாடுகள் தொடங்கின.
தொடர்ந்து, காலை 11.20 மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங் கிராதேவிக்கு பிரம்மாண்டமான மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெற்றது. இதையடுத்து, நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர், விபூதி, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மதியம் 1.20 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.
மதியம் 1.30 மணிக்கு பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா தீபாராதனையுடன் சிறப்பு யாக வழிபாடுகள் நடைபெற்றன. புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம் மற்றும் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.