தூத்துக்குடி, ஆக. 4: தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) முதுநிலை மற்றும் ஆராய்ச்சி கணிதவியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன், சிந்தனைத் திறன் மற்றும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் 'Brainiacs–2026' பள்ளிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டி ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 22 அணிகளைச் சேர்ந்த 44 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது அறிவுத் திறனை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியை ICE King of Kings CBSE பள்ளி முதல்வர் திருமதி இ. ஜூலியா கிரெனாப் தொடங்கி வைத்தார். போட்டிக்கு நடுவராக பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி (தன்னாட்சி) கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பி. டேனியல் செயல்பட்டு, பல்வேறு சுற்றுகளின் மூலம் போட்டியை சிறப்பாக நடத்தினார்.
நிறைவு விழாவிற்கு கல்லூரியின் துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எழிலரசி தலைமை வகித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். போட்டியின் முடிவில், அழகர் பொதுப் பள்ளி முதல் பரிசையும், சக்தி விநாயகர் இந்து வித்யாலயா CBSE சீனியர் பள்ளி இரண்டாம் பரிசையும், புனித அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் பரிசையும் பெற்று சிறப்பித்தன.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு போட்டியாளர்களை பாராட்டினர். அறிவை வளர்க்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களின் தன்னம்பிக்கையையும் போட்டித் திறனையும் மேம்படுத்தும் என நிகழ்ச்சியில் பேசப்பட்டது.