தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முதல் வார்டில் அமைந்துள்ள பண்டாரம்பட்டி பகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த பகுதியில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த தனசிங் என்பவரது குடும்பம் மட்டும் வசித்து வருகிறது. தனசிங் இறந்ததையடுத்து, அவரது மனைவி சசிகலா, மகன்கள் பிரதீப், பிரேம்நாத் மற்றும் தங்கை குடும்பத்துடன் இசக்கியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றனர்.
இந்த குடும்பம் வீட்டிலேயே டிஸ்டில் வாட்டர் தயாரித்து விற்பனை செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 26ம் தேதி பிரதீப்பின் அக்கா பிரபாவதியின் குழந்தை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடும்பத்தினர் பங்கேற்றிருந்தனர். அப்போது “பைசன்” திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த கஞ்சா மது போதையில் இருந்த கும்பல் பிரதீப்பின் ஜாதியை சொல்லி திட்டியதுடன், “பசுபதி பாண்டியன் ஸ்டைலில் கொலை செய்து விடுவோம்” என மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதன்பின் பிரதீப் மற்றும் அசோக்குமார் ஒரு பைக்கிலும், பிரதீப்பின் அண்ணன் பிரேம்நாத் மற்றொரு பைக்கிலும் பண்டாரம்பட்டி சந்தன மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, அஸ்வின், பரத், முத்தமிழ் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் மூவருக்கும் கை மற்றும் தலையில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, பிரதீப் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், காவல்துறையினர் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாததுடன், முதல் தகவல் அறிக்கையில் சில உண்மைகளை மறைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், “இந்த ஊரை விட்டு வெளியேறுங்கள்” என பிரதீப்பின் குடும்பத்தினரிடம் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வின், பரத் உள்ளிட்டோர் தங்களிடம் ஜாதி பெயர் சொல்லி திட்டியதாக புகார் அளித்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரியுள்ளனர். இதனால், இரு தரப்பினரும் புகார் அளித்த நிலையில் ஊரில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு நாடார் பேரவை மாநிலத் தலைவர் முத்து ரமேஷ் நாடார், பெருந்தலைவர் மக்கள் நலச் சங்க தலைவர் எஸ்.பி. மாரியப்பன், வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரன், மண்டலத் தலைவர் பொன்ராஜ் சிவா, காமராஜர் லட்சியப் பேரவை தலைவர் பிரசன்ன குமார், மாவட்டச் செயலாளர் ஜான் வெஸ்லி உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில்,
“பைசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த கஞ்சா மது போதையிலிருந்த கும்பல் ஜாதி உணர்வை தூண்டும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளது. காவல்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தூத்துக்குடியில் நாடார் சமூகத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், நாடார் அமைப்புகள் திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்,” என எச்சரித்துள்ளனர்.
மேலும் பிரதீப்பின் தாய் சசிகலா,
“என் இரண்டு மகன்களையும் அரிவாளால் தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயந்த நிலையில் ஊரை விட்டு விலகி இருக்கிறோம்,” எனக் கூறியுள்ளார்.
பண்டாரம்பட்டி பகுதியில் நடந்த இந்த சம்பவம் தூத்துக்குடி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், காவல்துறை உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட கும்பலை கைது செய்ய வேண்டும் என நாடார் பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
கஞ்சா போதை கும்பல் தாக்குதல்: “நாடார் சமூகத்திற்கு பாதுகாப்பில்லை!” – பேரவை குற்றச்சாட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கொசு ஒழிப்பு பணி துவக்கம் – மேயர் ஜெகன் தலைமையில் அதிரடி நடவடிக்கை!!
அடுத்த
தூத்துக்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026