தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், எஸ்.ஐ.ஆர். (SIR) நடைமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (சிபிஎம்-எல்) ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



அதன் அடிப்படையில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் முன்பு இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கரும்பன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.



மேலும், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.அர்ஜுனன், இரா.பேச்சிமுத்து, தா.ராஜா, பா.புவிராஜ், தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எம்.எஸ்.முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், எஸ்.ஐ.ஆர். நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பங்கேற்பாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.