தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் முதுகலை மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், “மனிதரும் செயற்கை நுண்ணறிவும்: எதிர்காலப் பணிச்சூழலை மறுவடிவமைத்தல்” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.



கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். முதுகலை மனிதவள மேலாண்மைத் துறைத் தலைவரும் உதவிப் பேராசிரியருமான முனைவர் ஜெனட் ஜெயா கவிதா வரவேற்புரையாற்றினார்.



கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி சி. சிபானா தலைமையுரையாற்றினார். சுயநிதிப் பிரிவின் இயக்குநர் அருட்சகோதரி முனைவர் ஆ. ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ் வாழ்த்துரை யாற்றினார். தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற வல்லுநர்கள் கௌரவிக்கப் பட்டனர்.



முதல் தொழில்நுட்ப அமர்வில், கேரளப் பல்கலைக்கழக ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநரும், காரியவட்டம் வளாகம், திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக்கழக வணிகவியல் உதவிப் பேராசிரியருமான முனைவர் முஸ்தாக் அஹமத் கே., செயற்கை நுண்ணறிவால் பணியிடங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நவீன மனிதவள மேலாண்மை நடைமுறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.



இரண்டாவது தொழில்நுட்ப அமர்வில், காயல்பட்டினம் வாவூ வசீகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் உள்ளவரும், வணிக நிர்வாகத் துறைத் தலைவரும், உதவிப் பேராசிரியருமான முனைவர் எஸ்.ஏ. ரஹ்மத் அமீனா பேகம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணியாளர் தேர்வு மற்றும் திறமையாளர்களை அடையாளம் காணும் முறைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.



கருத்தரங்கின் நிறைவில் முதுகலை மனிதவள மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் செல்வி அ. கிறிஸ்டீனா மஸ்கரனாஸ் நன்றியுரையாற்றினார். தொடர்ந்து தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.