அய்யனடைப்பு–கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கால பைரவர் சித்தர் பீடத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, 10.09.2026 வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகமும் நடைபெற்றது.
அம்மனை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், மனநிம்மதி பெருகும், செல்வ வளம் அதிகரிக்கும், தீராத நோய்கள் தீரும், கடன் தொல்லைகள் நீங்கும், அரசியலில் மேன்மை கிடைக்கும், முன்னோர்களின் சாபம் நீங்கும், தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும், முன்ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் ஆனந்தம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் மற்றும் ஸ்ரீ கால பைரவர் சித்தர் பீட அறக்கட்டளை, பிரத்தியங்கிரா தேவி பீடம் சார்பில் செய்திருந்தனர்.