தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு, முத்தையாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சுமார் 1,800 ஏக்கர் நில எடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 25 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாவட்ட அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ். லாரன்ஸ் தலைமையில் இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:
முள்ளக்காடு, முத்தையாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்புத் தொழிலை நம்பி 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது இப்பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக சுமார் 1,800 ஏக்கர் நிலம் எடுக்கப்படுவதால், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உப்பள உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இந்தத் திட்டத்திற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தினர். தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, திட்டத்தை வேகப்படுத்தும் வகையில் நில எடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது கவலை அளிக்கிறது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2-ம் தேதி முள்ளக்காடு பகுதியில் சட்டத்திற்கு உட்பட்டு அமைதியான முறையில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 25 பேர் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
“தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்”
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக ஜனநாயக மற்றும் அகிம்சை வழியில் போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். எப்போதும் தொழிலாளர்கள் பக்கம் அரசு உள்ளது என்ற நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு இது அவசியமான நடவடிக்கையாகும்.
முள்ளக்காடு முதல் ஆறுமுகநேரி வரையிலான கடற்கரைப் பகுதிகளில் தரமான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் உணவுத் தேவைக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் உப்பு இப்பகுதியில் உற்பத்தியாகிறது. இப்பகுதியின் பாரம்பரிய மற்றும் அடிப்படைத் தொழிலாக உப்புத் தொழில் இருந்து வருகிறது.
முள்ளக்காடு, முத்தையாபுரம், கோவளம், பசுவந்தரை, புள்ளாவளி, பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களை நம்பி பல ஆயிரம் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, கப்பல் கட்டும் தளத் திட்டத்தால் தமிழகத்தின் பாரம்பரிய உப்புத் தொழில் அழியும் அபாயம் ஏற்படும்.
“உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்”
உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உப்பள உரிமையாளர்களை தமிழக அரசு நேரடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் மற்றும் தொழில் பாதிக்கப்படாத வகையில் சுமூகமான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ந்து அகிம்சை வழியில் காந்தியவாத முறையில் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
“தேவைப்பட்டால் தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம்”
அரசின் கவனம் இப்பிரச்சினையின் மீது திரும்பவில்லை என்றால், தூத்துக்குடியில் உள்ள ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்க மக்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த கூட்டமைப்பு தயாராக உள்ளது.
கடந்த காலங்களில் தூத்துக்குடி மக்கள் தங்களது வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தன்னெழுச்சியாக போராடியதைப் போல, ஏழை உப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காகவும் தூத்துக்குடி மக்கள் போராட்டக்களத்திற்கு வருவார்கள் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினையை உடனடியாக கவனத்தில் கொண்டு, ஏழை உப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். பல ஆண்டுகளாக தங்களது சொத்துகளை விற்றும், கடன் பெற்றும் தொழில் செய்து வரும் உப்பள உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாத வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், காந்தியடிகளின் தண்டி யாத்திரையுடன் வரலாற்றுத் தொடர்புடைய இப்பகுதியில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் பாரம்பரிய உப்புத் தொழிலை வரலாற்றுச் சின்னமாகக் கருதி பாதுகாக்க வேண்டும். உப்புத் தொழிலாளர்கள் மற்றும் உப்பள உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கப்பல் கட்டும் தளத் திட்டத்தை கைவிடுவதற்கான உறுதியை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.