தூத்துக்குடி நகர் பணிமனையில் பணிபுரிந்து வரும் நடத்துனர் ஒருவர், பணி ஒதுக்கீடு தொடர்பாக கிளை மேலாளர் மற்றும் பொறுப்பு உதவி பொறியாளர் சுரேஷ் தன்னை கடுமையாக திட்டி, மிரட்டியதாக கூறப்படும் நிலையில், இன்று காலை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
பாதிக்கப்பட்ட நடத்துனர் ஆறுமுகம், புதிய பணி ஒதுக்கீட்டில் தனது சீனியாரிட்டி அடிப்படையில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த ஏரல் வழித்தட பேருந்தில் கையொப்பமிட்டு பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பேருந்தை கிளை மேலாளருக்கு நெருக்கமான மற்றொரு தொழிலாளிக்கு வழங்குவதற்காக கிளை மேலாளர் முயற்சி செய்து வந்ததாகவும், அதற்காக அந்த பேருந்தில் பணியாற்றி வரும் நடத்துனரை மாற்றிவிட்டு, அந்த தொழிலாளியை பணியில் அமர்த்த முயற்சி நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட நடத்துனர் பணியில் மிகவும் தாமதமாக வருவதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பணிகளுக்கு தாமதமாக செல்வதாகவும் பொய்யான புகார் கூறப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து நடத்துனர் ஆறுமுகத்தை கிளை மேலாளர் சுரேஷ் கடுமையான வார்த்தை களால் திட்டியதுடன், இனிமேல் குறிப்பிட்ட அந்த பேருந்தில் பணி வழங்கப்படாது என்றும், தான் ஒதுக்கும் பேருந்தில்தான் பணியாற்ற வேண்டும் என்றும் மிரட்டியதாகவும் தொழி லாளர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.
இந்த சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நடத்துனர் ஆறுமுகம் இன்று காலை தற்கொலைக்கு முயன்றதாகவும், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
கிளை மேலாளர் சுரேஷின் நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பல தொழிலாளர்கள் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.
மேலும், “என்னை எவரும் ஒன்றும் செய்ய முடியாது” என தொழிலாளர்கள் முன்னி லையில் அவர் பலமுறை கூறியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் மற்றும் சமூகப் பின்னணி காரணமாக, பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப் பட்டுள்ளது.
சர்வீஸ் புக்கில் மாற்றம் செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாகவும் புகார்கள் எழுந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு தொழிலாளி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர் அதிகாரிகள் தலையிட கோரிக்கை
தொழிலாளர்களுக்கு தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தொடர்ந்தால், நிலைமை மேலும் மோசமடையும் என்றும், கடந்த காலத்தில் செங்கோட்டை பகுதியில் கிளை மேலாளருக்கு எதிராக ஏற்பட்ட சம்பவம் போன்ற விரும்பத்தகாத நிலை உருவாகும் சூழலை கழக நிர்வாகம் ஏற்படுத்தக்கூடாது என்றும் தொழிலாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
எனவே, தொழிலாளர்களின் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதி செய்யப்பட்டால் கிளை மேலாளர் சுரேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நடத்துனர் ஆறுமுகம் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக காவல் துறையினரின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.