தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில், கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பெண் பணியாளர்களை அழைத்து வந்து அலுவலக கோப்புகளை கீழ்தளத்தில் இருந்து மாடிக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பெண் பணியாளர்கள் கூறுகையில், அலுவலக கோப்புகளை மாடிக்கு எடுத்துச் சென்ற பின்னர் பணியை முடித்துவிட்டு செல்லலாம் என்றும், 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்ததாக பதிவேட்டில் பதிவு செய்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டதாக கூறினர். இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பது கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வாதார பாதுகாப்பையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். நீர்நிலைகள் தூர்வாருதல், நீர்வள பாதுகாப்பு, நில மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட ஊரக வளர்ச்சிக்கு பயன்படும் பணிகளே திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அலுவலக கோப்புகளை தூக்கிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தியதாக கூறப்படுவது அதிர்ச்சி யளிக்கிறது.
100 நாள் வேலை திட்டத்தின் பெயரில் ஒரு பணியை பதிவு செய்து கொண்டு, அதற்கு தொடர்பில்லாத வேறு பணியை தொழிலாளர்களிடம் வாங்குவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மேலும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் உரிய பணியை மேற்கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டிய அலுவலர்களே மாற்றுப்பணி செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுவது கண்டனத்துக் குரியது.
இந்த புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி, அன்றைய தினம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி என்ன, பதிவேட்டில் என்ன பணி குறிப்பிடப்பட்டுள்ளது, உண்மையில் அவர்கள் மேற்கொண்ட பணி என்ன என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், புகார் உண்மை என தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டம் என்பது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கான திட்டமே தவிர, அரசு அலுவலகங்களின் பணிச்சுமையை குறைப் பதற்கான திட்டம் அல்ல என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.