திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு நியமனத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை என்றும், தகுதியான விண்ணப் பதாரர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர். சித்ராங்கதன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு நியமனம் தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள செய்தி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24-ம் தேதி வியாழக்கிழமை எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் இரகசியமான முறையில் புதிய அறங்காவலர் களின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றதாகத் தெரியவருகிறது.
அறங்காவலர் பதவிக்காக 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களது விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப் படவில்லை என்றும், கல்வித் தகுதி மற்றும் நிர்வாகத் திறன் கொண்ட பலரின் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் திருத்தலத்தின் பாரம்பரிய வழக்கங்களை நன்கு அறிந்த உள்ளூர் பகுதி பக்தர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தைப் புறக்கணித்து, வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் அறங்காவலர் குழுத் தலைவராகவும், பின்னர் இடைக்காலத் தக்கராகவும் பதவி வகித்தவரையே மீண்டும் குழுத் தலைவராக நியமித்துள்ளதாகத் தெரிகிறது. முந்தைய நிர்வாகம் தொடர்பாக பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், அதே நபருக்கு மீண்டும் பொறுப்பு வழங்குவது தகுதியான மற்ற விண்ணப் பதாரர்களுக்கு அநீதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்ட நெரிசல், சண்முக விலாச மண்டபம் அடைக்கப்பட்டதால் ஏற்பட்ட தரிசன சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் பக்தர்களிடம் புகார்கள் இருப்பதாகவும், கோவில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள தொடர் பிரச்சினைகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் சித்ராங்கதன் வலியுறுத்தி யுள்ளார்.
அதேபோல், கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக இணை ஆணையரின் செயல்பாடுகள் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கோவிலில் போலி தரிசன டிக்கெட் தொடர்பாக பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பழைய நிர்வாகிகளையே மீண்டும் நியமித்திருப்பது அந்த விசாரணையின் நியாயத் தன்மை குறித்து பக்தர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.
எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு நியமனம் தொடர்பாக முழுமையான ஆய்வு மேற்கொண்டு, தகுதியான விண்ணப்பதாரர்களின் உரிமைகளையும் பக்தர்களின் நலனையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு அமைக்கும் நடைமுறை குறித்து மதுரை கிளை உயர்நீதிமன்றமும் விண்ணப்பங்கள் பெறுதல், பரிசீலித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை காலக்கெடுவுக்குள் மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.