தேர்தல் தொடர்பான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர். குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் தெரிவித்தார்.



தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். நடைமுறை தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவேகம் ரமேஷ் பேசியதாவது:



தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் மற்றும் எஸ்.ஐ.ஆர். நடைமுறை குறித்து பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பரப்பி வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் அதிகாரம், செயல்பாடு மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளின்படியே நடைபெற்று வருகின்றன.



தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். ஆனால், ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது. எஸ்.ஐ.ஆர். குறித்து காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகின்றனர். இதன் காரணமாக மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



எஸ்.ஐ.ஆர். நடைமுறை தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை கண்டறிந்து, உரிய நடைமுறைகளின்படி அவற்றை நீக்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 13 கோடி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது பொய்யான குற்றச்சாட்டு.



எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுத்தப்படுகிறது என்றும் காங்கிரஸ் கட்சி தவறான தகவல்களை பரப்பி வருகிறது. எஸ்.ஐ.ஆர். தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு விளக்கங்கள் தெளிவாக தெரிவிக்கப் பட்டுள்ளன.



சிறுபான்மை மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதும் பொய்யான குற்றச்சாட்டாகும். 18 வயது நிரம்பிய அனைவரும் உரிய நடைமுறைகளின்படி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



குடும்பத்தினரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றால், உரிய முறையில் கோரிக்கை மனு அளித்து பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கலாம். இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்றாலும் அதுகுறித்து உரிய முறையில் மேல்முறையீடு செய்யலாம்.



மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நடைமுறை களின்படி மேல்முறையீடு செய்யும் வாய்ப்பும் உள்ளது. எஸ்.ஐ.ஆர். பணிகள் அரசு ஊழியர்களான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், பி.எல்.ஓ.க்களுக்கு ஒரு கட்சியினர் அழுத்தம் கொடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறது.



எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மைக்கு மாறானவை. குற்றம் சாட்டுவது அனைவருக்கும் உள்ள ஜனநாயக உரிமை. அதே நேரத்தில், ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், ஜனநாயக உரிமைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் நல்ல அரசியல் கட்சியின் கடமை. எனவே, எஸ்.ஐ.ஆர். குறித்து பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்பாமல், உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.



பேட்டியின்போது பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.எம். ராஜேஷ், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், கிழக்கு மண்டல தலைவர் சண்முக சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.