கடந்த திமுக ஆட்சியில் அடிமட்டம் வரை ஊழல் சென்றுவிட்டதால் தான் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினர் என நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி. ராஜா தெரிவித்தார். மேலும், இடைத்தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அவர் அறிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் என்.பி. ராஜா கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழக ஆட்சி மீது எங்களுக்கு திருப்தி இல்லை. மக்கள் சேவை போதிய அளவில் இல்லை. நிர்வாக அனுபவமும் போதவில்லை. ஊழல் குறித்து தொடர்ந்து பேசினால் மக்கள் அதை விரும்புவார்கள் என நினைக்கின்றனர். ஆனால், அது கொஞ்ச காலத்திற்குத்தான்.
அதன்பிறகு நிர்வாக ரீதியாக மக்கள் திருப்தி அடையும் வகையில் செயல்பட வேண்டும். சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் திமுகவை எதிர்த்தே பேசுவதிலேயே கவனம் செலுத்தப்பட்டது. தற்போது புதிய தலைமைச் செயலகம் கட்டுவது உள்ளிட்ட திட்டங்களை கூறி, முந்தைய ஆட்சியுடன் ஒப்பீடு செய்து வருகின்றனர். இதனால் சிறப்பான ஆட்சி நடை பெறுகிறது என்று கூற முடியாது.
கடந்த திமுக ஆட்சியில் அடிமட்ட அளவு வரை ஊழல் சென்றுவிட்டதாக மக்கள் கருதியதால்தான் ஆட்சி மாற்றத்தை விரும்பினர். சட்டமன்றத்தில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து தற்போது உறுதியாக கூற முடியாது.
அதிமுகவுக்கு ஆதரவு
நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. அதிமுக வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களிலும் நாம் இந்தியர் கட்சியின் ஆதரவு அதிமுக–பாஜக கூட்டணிக்குத்தான். எங்களது தொண்டர்கள் அங்கு பணியாற்றுவார்கள். அதிமுக எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளதால் அந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற வேண்டும்.
லண்டன் பயணம்
இடைத்தேர்தலில் செல்வாக்கை அதிகரிக்கவும், அஜித்தின் ஆதரவு வேறு யாருக்கும் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதுதான் லண்டன் பயணம். அது ஒரு திரைப்பட ப்ரமோஷன் போன்றது.
கப்பல் கட்டும் தளம் தேவை
தூத்துக்குடிக்கு கப்பல் கட்டும் தளம் தேவை. அது அமைந்தால் தூத்துக்குடி மேலும் வளர்ச்சி அடையும். ஆந்திராவின் விசாகப்பட்டினம் போன்று தூத்துக்குடியும் வளர்ச்சி அடையும்.
புதிய அனல்மின் நிலையம் தூத்துக்குடிக்கு தேவையில்லை. ஏற்கனவே உள்ள அனல்மின் நிலையங்களால் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களுக்கு தடை
தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தால், 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லையெனில் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிகளில் சேரும் நிலை ஏற்படலாம்.
அடுத்த தேர்தல் வரும்போது விஜய்க்கு இதே அளவு மக்கள் செல்வாக்கு இருக்குமா என்பது தெரியவில்லை. தற்போது 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறாததால் தேர்தல் தாமதமாகிறது. தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்றால் இந்த ஆட்சி நீடிக்கும்.
தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தாலும் மாநில கட்சிகள்தான் அதிக அளவில் வெற்றி பெறும்.
“ஊழல் இரட்டிப்பு”
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஊழல் இரட்டிப்பாகியுள்ளது. ஊழலை தடுப்பதாக கூறுவதால் பல பகுதிகளில் பணிகள் நடைபெறவில்லை. இதனால் பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஊழலை ஒழிக்க அடிப்படையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு என்.பி. ராஜா தெரிவித்தார். பேட்டி: என்.பி. ராஜா, தலைவர், நாம் இந்தியர் கட்சி