திமுக 78-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பெரியார் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதாஜீவன் தலைமையில், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச்செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் கீதாஜீவன் மற்றும் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பு அமைக்கப் பட்டிருந்த பெரியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திமுக தொடக்க நாளை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றி, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினர்.
இதையடுத்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத் தலின்படி சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப் பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில அணி நிர்வாகிகள் புலோரன்ஸ், அன்பழகன், மண்டலத் தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, மாவட்ட அணி நிர்வாகிகள் கவிதாதேவி, அருணாதேவி, பிரபு, நாகராஜன், குபேர் இளம்பரிதி, அருண்குமார், பழனி, கணேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாநகர அணி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள், வட்ட பிரதிநிதிகள், பகுதி அமைப்பாளர்கள், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், எஸ்.ஜே.சுமன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.