தூத்துக்குடி கக்கன்ஜி நகரில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினரின் காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை. இவர் கக்கன்ஜி நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு நேற்று இரவு நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம். சகாயராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், காங்கிரஸ் நிர்வாகியின் காரை அடித்து நொறுக்கிய சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூருக்கு உடனடியாக தெரிவிக்கப்படும் என்றும், வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் நேரடியாக புகார் அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் எஸ்.எம். சகாயராஜ் தெரிவித்துள்ளார்.