தூத்துக்குடி மாவட்ட நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம், சான்றோர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.



கூட்டத்திற்கு சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத் தலைவர் மாரியப்பன், நாடார் மகாஜன சங்க மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.



தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் சிவா நாடார், தமிழ்நாடு காமராஜர் பேரவை மாநில செயலாளர் அழகு மந்திரி, காமராஜர் லட்சியப் பேரவைத் தலைவர் பிரசன்னகுமார் மற்றும் பாண்டியனார் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



சமத்துவ மக்கள் கழக மாவட்ட அமைப்புத் தலைவர் கண்டிவேல் மற்றும் காமராஜர் நற்பணி இயக்க மாவட்டத் தலைவர் சிவசு முத்துக்குமார் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். கூட்டத்தில், வருகிற செப்டம்பர் 26-ஆம் தேதி மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் 23-வது ஆண்டு வீர வழிபாடு நிகழ்வை முன்னிட்டு, மாவட்ட நாடார் சங்கங்கள் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 250 வாகனங்களில் அணிவகுத்துச் செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.



மேலும், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள நான்கு காமராஜர் சிலைகளுக்கும் தினந்தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் நாடார் சமுதாயம் இழந்த பிரதிநிதித்துவத்தை மீட்டெடுக்கும் வகையில், போர்க்கால அடிப்படையில் நாடார் சமுதாயப் பெரியோர்கள் மற்றும் இளைஞர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.



அதேபோல், வரவிருக்கும் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்காத அரசியல் கட்சிகளைப் புறக்கணிப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. முள்ளக்காடு–முத்தையாபுரம் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட்டு, உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.



இந்தத் திட்டம் கைவிடப்படாத பட்சத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நாடார் உறவின்முறை சங்கங்கள் மற்றும் நாடார் சமுதாய அமைப்புகளை ஒன்றிணைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூட்டமைப்பு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்புத் தலைவர் சிலுவை நன்றியுரை ஆற்றினார்.