தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், மழைநீர் மற்றும் கழிவுநீர் தடையின்றி சென்றடைய வேண்டிய இடங்களுக்கு செல்லும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 14 கழிவுநீர் வழித்தடங்கள், பக்கிள் ஓடை மற்றும் உப்பாற்று ஓடை ஆகியவை மாநகராட்சி மக்களுக்கு அரணாக பாதுகாப்பாக நிற்கும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட திருச்செந்தூர் சாலையிலிருந்து முள்ளக்காடு வழியாக கோவளம் கடற்கரை வரை செல்லும் ஓடையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட 60 வார்டுகளிலும் எந்தவித பாரபட்சமும் இன்றி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையவழி தளங்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களையும் கோரிக்கை களையும் பதிவு செய்து, எந்தப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வரிசைப்படுத்தி, அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு முறையாக செயல்படுத்தி வருகிறோம்.
மாநகராட்சிப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் அனைத்து தெருக் களுக்கும் சென்று, வீடுகளில் உள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களை நேரடியாக மக்களிடமிருந்து சேகரித்து வருகின்றனர். தினசரி சுமார் 180 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
சேகரிக்கப்படும் கழிவுகளில் மக்கும் குப்பைகள் உரம் தயாரிப்பதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. மக்காத குப்பைகள் முறையாகப் பிரிக்கப்பட்டு, பிளாஸ்டிக், தொழில்நுட்பக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், மருத்துவத் துறை கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் தருவைகுளம் குப்பைக் கிடங்கு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய முறையில் கையாளப் படுகின்றன.
மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையை முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறோம். தேவையற்ற பொருட்கள் மற்றும் கழிவுகளை கழிவுநீர் கால்வாய்கள், வழித்தடங்கள் மற்றும் பக்கிள் ஓடையில் பொதுமக்கள் கொட்டக் கூடாது. அவற்றை நேரடியாக வீடுகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், ஒரு சிலர் செய்யும் தவறுகளால் கழிவுநீர் வழித்தடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப் படுகின்றன. இதனால் நீரோட்டம் ஏற்படும் நேரங்களில் அடைப்புகள் உருவாகி, கழிவுநீர் தடையின்றி செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பக்கிள் ஓடை மற்றும் அதனுடன் இணைந்துள்ள கழிவுநீர் வழித்தடங்கள் மூலம் நீர் கடலுக்கு சென்றடைகிறது. சில பகுதிகளில் கழிவுகள் தேங்கும் நிலை ஏற்படலாம். அவ்வாறு தேங்கும் கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு, நீரோட்டம் சீராக நடைபெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையான பராமரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகள் நடைபெறாததால் மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. நாங்கள் பொறுப்பேற்ற பிறகு அந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து, சுழற்சி முறையில் மக்கள் நலப் பணிகளை செயல்படுத்தி வருகிறோம். பணிகள் முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
வரும் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் தூத்துக்குடி மாநகராட்சி தயாராக உள்ளது. அதற்குத் தேவையான அனைத்து நீர்வழித் தடங்களையும் முழுமையாக சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேவையற்ற கழிவுகள் அகற்றப்பட்டு, எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் மழைநீர் தடையின்றி சென்றடைய வேண்டிய இடங்களுக்கு செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காக பக்கிள் ஓடை மற்றும் உப்பாற்று ஓடைகளுடன் இணைந்து, புதிதாக 14 கழிவுநீர் வழித்தடங்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. கடந்த காலங்களில் மழை பெய்தால் மக்கள் அச்சப்படும் நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி, தற்போது பொதுமக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம். மாநகராட்சிப் பகுதி முழுவதும் உள்ள கழிவுநீர் வழித்தடங்களில் தூர்வாருதல், மண் அகற்றுதல் மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மழையின் தாக்கம் எந்த அளவில் இருந்தாலும், எந்த வகையில் இருந்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் முழுமையான முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோல் அனைத்து வார்டுகளிலும் மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் தெரிவிக்கும் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறோம். எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் பட்சிராஜ், ராஜதுரை, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்
“10 ஆண்டுகளில் நடக்காத பணிகளை 55 மாதங்களில் நிறைவேற்றினோம்” தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளாக நிறைவேற்றப் படாமல் இருந்த பல்வேறு பணிகளை, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனக்கு வழங்கிய வாய்ப்பின் மூலம் கடந்த 55 மாதங்களில் எந்தவித பாரபட்சமும் இன்றி நிறைவேற்றியுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
மேலும், மு.க. ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், பிரையண்ட் நகர் மற்றும் 16, 17, 18 ஆகிய வார்டுப் பகுதிகளில் மழைநீர் பல நாட்கள் வெள்ளம்போல் தேங்கி நின்ற நிலை மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய திட்டங்கள் மற்றும் நவீன நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட பணிகளின் காரணமாக, தற்போது எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்காத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு உறுதுணையாக இருந்த மக்கள் பிரதிநிதிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி தெரிவித்த மேயர், அனைவரின் ஆதரவோடும் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணியாற்றி வருவதாகக் கூறினார்.
“எங்களுக்கு பொறுப்பு இருக்கும் காலம் வரை மக்களுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும்” என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி உறுதிபடத் தெரிவித்தார்.