தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட கிருபை நகர், கிருபை சர்ச் ரேஷன் கடை அருகே உள்ள பகுதியில் முட்புதர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் 50-வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் கவுன்சிலர் சரவணகுமார் துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீப்பிடித்த பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீ அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் சரவணகுமார் மற்றும் விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களுக்கு கிருபை நகர் பொதுமக்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டினர்.