தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஸ்ரீமூலக்கரை ஊராட்சியில் சேதமடைந்துள்ள பழைய பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் அமைக்கவும், சாலைப் பகுதிகளை சீரமைக்கவும் கோரி சமூக ஆர்வலர் வீ.சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் வீ.சரவணபெருமாள் ஆகியோர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் V.G. சரவணனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் வீ.சுரேஷ்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஸ்ரீமூலக்கரை ஊராட்சியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் குளத்துக்கரை சாலையில் அமைந்துள்ள பழைய பாலம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சுமார் 30 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தை தினந்தோறும் ஏராளமான விவசாயிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத் துக்குச் செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இந்த பாலம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்துள்ள பழைய பாலத்தை அகற்றி, அதற்கு பதிலாக புதிய பாலம் கட்டித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் வீ.சரவணபெருமாள் அளித்துள்ள மனுவில், ஸ்ரீமூலக்கரை ஊராட்சிக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் சரள்மண் இல்லாததால் சாலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சாலை வழியாக பள்ளி மாணவர்கள், பள்ளி வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் சென்று வருகின்றன. சாலையின் இருபுறமும் உரிய முறையில் சரள்மண் அமைத்து, பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிக்கும் வகையில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறைக்கு உரிய உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீமூலக்கரை பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாலம் மற்றும் சாலை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.