முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், உப்பு உற்பத்தித் தொழிலை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது என்றும் வலியுறுத்தி, நாடார் அனைத்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி போல்பேட்டை 60 அடி சாலையில் உள்ள சான்றோர் குல கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு வழக்கறிஞர் சிலுவை தலைமை தாங்கினார். சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு நாடார் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அற்புதராஜ், “உணவின் அடிப்படைத் தேவையான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மாவட்டம் தூத்துக்குடி. முள்ளக்காடு, பொட்டல்காடு, புல்லாவழி, கோவங்காடு, பழையகாயல், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களை அழித்து, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு கப்பல் கட்டும் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
மேலும், “கடந்த திமுக ஆட்சியில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரிடம் முறையிட்டு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு, முன்பு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது திட்டத்திற்கு ஆதரவாக செயல்படுவது ஏன் என்பது மக்களுக்கு புரியவில்லை” எனக் கேள்வி எழுப்பினார்.
முள்ளக்காடு பகுதியில் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த 10 நாட்களுக்குள் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். அமைச்சர் ஸ்ரீநாத்தை மக்கள் தொடர்புகொள்ள முடியாத நிலை இருப்பதாகவும், மக்கள் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் அற்புதராஜ் வலியுறுத்தினார்.
வழக்கறிஞர் சிலுவை பேசுகையில், “ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் உப்பே உணவுப் பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 1,800 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டம் உப்பு உற்பத்தித் தொழிலையும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். எனவே கப்பல் கட்டும் தளத் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என்றார்.
மேலும், “கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு ஆதரவு தெரிவிப்பது ஏன்? முன்பு ஒரு கைப்பிடி மண்ணை அள்ளிப் போட்டவர்கள், இன்று இரண்டு கைகளாலும் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள். அரசு தனது முடிவை மாற்றாவிட்டால் மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடைபெறும்” என்றும் அவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத் தலைவர் மாரியப்பன், மகாஜன சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், காமராஜர் லட்சிய பேரவைத் தலைவர் பிரசன்னகுமார், நாடார் சங்கத் தலைவர் சிவா, பாண்டியனார் மக்கள் இயக்கத் தலைவர் டேவிட், நாடார் பேரவைத் தலைவர் அருண்சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.