தூத்துக்குடி மாநகர மக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வல்லநாடு நீரேற்று மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்காவுடன் அதிகாலை நேரத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகரின் 60 வார்டுகளுக்கு வல்லநாடு ஆற்றுப்படுகையிலிருந்து நீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் 36 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வல்லநாடு ஆற்றுப்படுகையிலிருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மேயர் மற்றும் ஆணையர் உடனடியாக அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
முதலில் வல்லநாடு அகரம் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, தினசரி எவ்வளவு அளவு நீர் எடுக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பின்னர், கடந்த பெருவெள்ளத்தால் சேதமடைந்த இரண்டாவது குடிநீர் குழாய் மற்றும் பம்பிங் நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டனர்.
அப்போது, ஒரு வாரத்திற்குள் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, மாநகரில் தினசரி குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார். தொடர்ந்து, பிரதான குடிநீர் குழாய் உடைந்து அருவிபோல் நீர் வெளியேறிக் கொண்டிருந்த இடத்தை பார்வையிட்ட மேயர், "இவ்வளவு தண்ணீர் வீணாகும் நிலையில் ஏன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை?" என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். குழாய் உடைப்பு ஏற்பட்ட காரணம், அதை சரிசெய்யும் தொழில்நுட்ப நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்களையும் கேட்டறிந்து, உடனடி சீரமைப்பு பணிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, அங்குள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1.2 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி திட்டத்தையும் பார்வையிட்டு, அதன் செயல்திறன் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, "வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடிக்கு நான்கு பிரதான குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குழாய்கள் வெள்ளத்தால் சேதமடைந்த நிலையில், அவற்றின் சீரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நான்காவது பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சுமார் 20 மில்லியன் லிட்டர் (20 MLD) தண்ணீர் வீணாகியுள்ளது.
பனிமய மாதா ஆலய திருவிழா மற்றும் பல்வேறு கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால், ஆகஸ்ட் 6 வரை வழக்கம்போல் குடிநீர் விநியோகம் தொடரும். ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் குழாய் உடைப்பு முழுமையாக சரிசெய்யப்படும். அதன்பிறகு வழக்கம்போல் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறும். பொதுமக்கள் இதனால் ஏற்படும் தற்காலிக சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும், "ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் மாநகரின் அனைத்து வார்டுகளுக்கும் தினசரி குடிநீர் விநியோகம் தொடங்கப்படும். அதன் பின்னர் படிப்படியாக 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டமும் செயல்படுத்தப்படும். வல்லநாடு சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 1.2 மெகாவாட் சோலார் மின் நிலையம் மூலம் நாளொன்றுக்கு 4,500 முதல் 7,200 யூனிட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மாதந்தோறும் சுமார் ரூ.10 லட்சம் வரை மாநகராட்சிக்கு மின்கட்டணச் செலவு மிச்சமாகும். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது" என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி செயற்பொறியாளர் லெனின், இளநிலைப் பொறியாளர் செல்வம், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் கனகராஜ், முத்துவேல், போல்பேட்டை திமுக பிரதிநிதி பிரபாகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.