நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இஸ்லாமியர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண் ரேகை மற்றும் கைரேகைகளைப் பதிவு செய்வதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



நெல்லை மாவட்டம் மேலப் பாளையத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் அமைதியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், எவ்வித சட்டப்பூர்வ அழைப்பாணையோ அல்லது முறையான காரணமோ இன்றி அப்பகுதி மக்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண் ரேகை, கைரேகைகளைப் பதிவு செய்வது மனித உரிமை மீறலாகும்.



20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாகக் கூறப்படும் சிறிய அளவிலான இஸ்லாமிய சமூக வழக்குகளை காரணம் காட்டி, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியை மட்டும் குறிவைத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் செயலாகும்.



தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்று அச்சுறுத்தல் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உரிய விசாரணை நடத்தி, இஸ்லாமிய மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும், இனிவரும் காலங்களில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் தேவையற்ற அச்சுறுத்தல் மற்றும் பதற்றம் ஏற்படாத வகையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.