தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.



மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக நோட்டு, புத்தகங்கள், பள்ளிப் பை, சீருடை உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பல்வேறு காரணங்களைக் கூறி ரூ.50 முதல் ரூ.300 வரை பணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இதுதொடர்பாக பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் 6 பேர் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் அந்தப் புகார் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும், பள்ளியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகவும் மாணவ, மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். அவ்வாறு வசூலிக்கப்படும் பணம் எந்த வகையில் செலவு செய்யப்படுகிறது என்பது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



சில வாரங்களுக்கு முன்பு ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்காகவும் மாணவ, மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி பள்ளிகளில் அரசு சார்பில் பல்வேறு கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், மாணவ, மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படும் புகார் குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



எனவே, ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து மாநகராட்சி ஆணையர் உடனடியாக விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, தவறு நடைபெற்றி ருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.