தூத்துக்குடி நிகிலேசன் நகர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 8-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு செல்வ விநாயகருக்கு கணபதி ஹோமம் நடைபெற்றதுடன், 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் தொடங்கியது.
பால்குடம் ஏந்திய பெண்கள் அப்பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று செல்வ விநாயகர் கோவிலை வந்தடைந்தனர். இந்த ஊர்வலத்தில் 51 பெண்கள் கலந்து கொண்டு பால்குடம் ஏந்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து செல்வ விநாயகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம் மற்றும் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.