தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் சர்வதேச ஓசோன் தின விழா நடைபெற்றது.
விழாவில் அனைவரும் இணைந்து உயிர்பன்மை பாடலைப் பாடினர். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் சேசுஅந்தோனி தொடக்க உரையாற்றி, ஓசோன் படலத்தின் பாதிப்பு மற்றும் அதன் பாதுகாப்பில் மாணவர்கள் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து விளக்கினார்.
தொடர்ந்து மாணவிகள் சார்பில் ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு, கவிதை மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்புரையாற்றிய என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ம.சுகவதி, ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் மரங்களை அதிகளவில் வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
மாணவிகள் முத்துமகேஷ்வரி, முத்து பவித்ரா ஆகியோர் ஓசோன் பாதுகாப்பு குறித்த சொற்பொழிவு மற்றும் விழிப்புணர்வு பாடலை வழங்கினர். தொடர்ந்து தேசிய பசுமைப்படை மாணவ உறுப்பினர்கள் ஓசோன் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் ஜே.ஆர்.சி. பொறுப்பாசிரியர் ரெக்ஸ், ஓசோன் பாதுகாப்பு குறித்த கருத்துகளை எடுத்துரைத்து நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை மாணவ உறுப்பினர்களும், பொறுப் பாசிரியர் ராஜகுமார் சாமுவேலும் சிறப்பாக செய்திருந்தனர்.