தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 35 குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி சூழற்சி முறையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
அதன்படி, ஆதிபராசக்தி நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நடைபெற்று வரும் மின்மோட்டார் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அந்தப் பகுதிக்கு குடிநீர் வழங்குவது தொடர்பான மினிட் புத்தகத்தையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் இணைப்புப் பணிகளையும் மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:
“மக்கள் பிரதிநிதிகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் அமைய வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தயாரிக்கப் படுகின்றன. திட்டங்களை செயல்படுத்தும்போது நடைபெறும் பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து, எந்தவித குறைபாடுகளும் ஏற்படாத வகையில் ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளையும், வளர்ச்சிப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் தெரிவிக்கின்றனர். அவற்றையும் கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மக்களுக்கான திட்டங்களும், அவற்றின் செயல்பாடுகளும் முறையாக இருக்க வேண்டும் என்பதில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள 35 நீர்தேக்க தொட்டிகளும் முழுமையாக கண்காணிக்கப் பட்டு, சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி பணிக்குழுத் தலைவர் கீதாமுருகேசன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மாவட்ட மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, சுற்றுச்சூழல் அணி பொன்ராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.