மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸ், முதல்வர் விஜய் மற்றும் மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.



அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:



தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகின்றன. தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகக் கடைகளில், ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள் பட்டியலில் உள்ள சிலர் தங்களுக்குக் கிடைத்த கடைகளை உள்ளூர் வியாபாரிகளுக்கு தின வாடகை அடிப்படையில் உள்வாடகைக்கு விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



இது மாநகராட்சி சட்ட விதிகளுக்கு முரணானது என்பதால், இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உள்வாடகை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் வியாபாரிகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், இதனால் தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் நிலை ஏற்படுவதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.



எனவே, மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வணிக வளாகங்களிலும் உள்வாடகை முறையில் செயல்பட்டு வரும் கடைகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தி, உண்மையில் வியாபாரம் செய்து வரும் நபர்களுக்கே கடைகளை முறைப்படுத்தி வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.



மேலும், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆம்னி பேருந்து நிலையக் கடைகள் மற்றும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் வாடகைக் கடைகளின் உரிமையாளர்கள் பட்டியலையும் ஆய்வு செய்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



லேஅவுட் பணிகள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை



கடந்த 4½ ஆண்டுகளில் மாநகராட்சி எல்லைக்குள் மனைப்பிரிவுகளாக மாற்றப்பட்ட லேஅவுட்களில் மக்கள் குடியேறாத நிலையிலும், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் மற்றும் மாநகராட்சி நிதியை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து டிடிசிபி துறை மூலம் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அந்தோனி கிரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், யாருடைய அனுமதியின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை கண்டறிந்து, தொடர்புடைய ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி யுள்ளார்.



அதேபோல், வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் டவுன் சர்வே அதிகாரத்தின் கீழ் மாநகராட்சியின் பல பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி டிஎஸ்எல்ஆர் வழங்கப் படுவதாகக் கூறப்படுவதையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.



புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலை விரிவாக்கம் அவசியம்



புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் மற்றும் வெளியேறும் பேருந்துகள் மதுரை நோக்கிச் செல்லும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சாலையின் இடதுபுறத்தில் உள்ள மாநகராட்சி சைக்கிள் மற்றும் பைக் ஸ்டாண்ட், அதனைத் தொடர்ந்து அமைந்துள்ள கடைகள், கூட்டுறவு ஆவின் கடை மற்றும் முதல்வர் மருந்தகம் வரையிலான பகுதியில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதாகக் கூறியுள்ளார்.



இதனால் 3-ம் கேட் மேம்பாலத்தில் இருந்து மதுரை நோக்கி வரும் கனரக வாகனங்கள், மினிபஸ்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதும் அபாய நிலை இருப்பதாகவும், இருசக்கர வாகன விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.



மேலும், மேம்பாலத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் புதிய சிக்னல் அமைக்கப் பட்டுள்ளதால், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் சிக்னலில் கனரக வாகனங்கள் தேங்கி நிற்பதால், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



எனவே, கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான நிலம், மாநகராட்சி சைக்கிள் ஸ்டாண்ட் நிலம் மற்றும் அதனைத் தொடர்ந்து உள்ள நிலங்களை, தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்த நில மாற்றுச் சட்டத்தின்படி உரிய இழப்பீடு வழங்கி கையகப் படுத்தி சாலையை விரிவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



அப்பகுதியில் தற்போது அமைந்துள்ள சிக்னலை அகற்றி, ஏவிஎம் திருமண மண்டபம் மற்றும் சுசி பெட்ரோல் நிலையம் அமைந்துள்ள நான்கு முனை சந்திப்புப் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



மேலும், நெடுஞ்சாலையில் மத்திய கூட்டுறவு வங்கிக்கு எதிரே மக்கள் பயன்பாட்டிற்கு இடையூறாக உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மற்றும் கே.டி.சி. நகர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் ஆகியவற்றை மாற்றி அமைத்து சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.



சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் குறுக்கு வழி இணைப்புச் சாலைகளுக்கு மாற்று வழி ஏற்படுத்தி, உயிரிழப்புகள் மற்றும் விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பான போக்குவரத்துத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், மாநகர மக்களின் நீண்டநாள் துயரத்திற்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸ் தனது கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளார்.