தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி தொடர்ந்து சுழற்சி முறையில் ஆய்வு செய்து வருகிறார். அனைத்துத் தரப்பினரின் கோரிக்கை களுக்கும் முக்கியத்துவம் அளித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மழைக்காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள வடிகால்களில் தேங்கியுள்ள மணல், கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ராட்சத ஜெட் ராடிங் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை முறையாகவும் விரைவாகவும் முடித்து மழைநீர் தேங்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பணியாளர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், கவுன்சிலர் நாகேஸ்வரி, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி ஜேஸ்பர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.