தூத்துக்குடி உப்பளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களை திரட்டி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



தூத்துக்குடி முள்ளக்காடு, கோவளம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கோவளம், பசுவந்தரை, தண்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.



கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பொருளாளர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் ரகுபதி, முகேஷ், சண்முகவேல், பால சுப்ரமணியன், எல்.ஆர். சிவாகர், வழக்கறிஞர் பாஸ்கர், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில், உப்பு உற்பத்தி செய்யப்படும் இடங்களையும், மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் பகுதிகளையும் தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்தி, கொரிய நாட்டைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்திற்கு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக வழங்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மேலும், தூத்துக்குடி உப்பளங்களை பாதுகாக்க வலியுறுத்தி உப்பு உற்பத்தி யாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கப்பல் கட்டும் தளத்தை மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.



உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் எழுப்பி பேசிய தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்துக்கு கூட்டத்தில் சிறப்பு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தப் பிரச்சினை தொடர்பாக தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், 10 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித் துள்ளதாகவும், அதன்படி தமிழக முதல்வரை சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்து பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



தொடர்ந்து சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், “தூத்துக்குடி உப்பளங்கள் மீது கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களை ஒன்றிணைத்து சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்தனர்.