தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை இருப்பதாகவும் பகுதி சபைக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்த நிலையில், செப்டம்பர் 18-ம் தேதி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா அறிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 20-வது வார்டு பகுதி சபைக் கூட்டம் கீதா ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. ஆணையர் ப்ரியங்கா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
பொதுமக்கள் தங்களது வார்டு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள், பக்கிள் ஓடை விரிவாக்கம், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அவர் விளக்கினார்.
குடிநீர் குறித்து பேசிய அவர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆற்றுப் படுகையில் தண்ணீர் குறைந்த நிலையிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சியின் 35 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி மாநகரின் முக்கிய குடிநீர் விநியோகப் பகுதிகளான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழவல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் 18-09-2026 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினம் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்துமாறும் ஆணையர் ப்ரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோன்று பராமரிப்புப் பணிகள் காரணமாக குறிப்பிட்ட நாளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவது தொடர்பான அறிவிப்புகள் முன்னரும் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.
ஒருபுறம் “தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை; தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது” என மேயர் ஜெகன் பெரியசாமி பகுதி சபைக் கூட்டத்தில் தெரிவித்துள்ள நிலையில், மறுபுறம் “செப்டம்பர் 18-ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது; பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என ஆணையர் ப்ரியங்கா அறிவித்துள்ளார்.
இதனால், தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் தொடர்பாக ஒரே நேரத்தில் வெளியாகியுள்ள இந்த இரு அறிவிப்புகளும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.