விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரம் தூத்துக்குடியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரூரல் டிஎஸ்பி சுதீர் தன்னை பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணையுமாறு மிரட்டியதாக தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் குறித்து அவதூறு மற்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறி, விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, மார்க்கண்டேயனை சந்திப்பதற்காக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏக்கள் அப்துல் வகாப், கருணாநிதி உள்ளிட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆனால், காவல்துறையினர் தடுப்புவேலி அமைத்து அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் திமுக நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், காவல்துறையினர் திமுகவினரை அப்புறப்படுத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., "மார்க்கண்டேயன் தனது கருத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார். அதில் என்ன தவறு உள்ளது? சட்டமன்றத்தில் இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படும்," என்றார். மேலும் அவர் கூறுகையில், "ரூரல் டிஎஸ்பி சுதீர் மற்றும் அவருடன் சபாரி உடையில் வந்த ஒருவர், என்னை பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணையுமாறு மிரட்டினர். திமுகவினரை எந்த காரணத்திற்காகவும் அடக்க முடியாது, தொட்டுப் பார்க்கவும் முடியாது என்று அவர்களிடம் தெரிவித்தேன்," என்று குற்றம்சாட்டினார்.
மார்க்கண்டேயனின் மனைவி, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முதுகுவலியால் அவதிப்படுவதாகவும் தகவல் தெரிவித்திருந்தார். "அவரை பார்க்க அனுமதி கேட்டபோதும் எங்களை உள்ளே விடவில்லை. ஒரு டிஎஸ்பி எங்களது இடுப்பில் கை வைத்தார்," என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் கருத்து தெரிவித்த அவர், "இந்த ஆட்சி இன்னும் நான்கு மாதங்கள்தான் நீடிக்கும். தற்போது பாராளுமன்றம் கூடிக் கொண்டிருக்கிறது. விரைவில் இதற்கான முடிவு தெரியும். எங்களை மிரட்டி அடக்க முடியாது," என்று ஆவேசமாக கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.