தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழக அரசின் மானிய விலையில் வீட்டுமனை வழங்கும் நீண்டகால கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தமிழகத்தை இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்வர் விஜய் செயல்பட்டு வரும் நிலையில், அரசின் திட்டங்களையும் மக்களின் குரலையும் சமூகத்திற்கு கொண்டு செல்லும் ஊடகத்துறையினரின் நீண்டகால கோரிக்கைக்கும் தீர்வு காண வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



1986-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தூத்துக்குடி தனி மாவட்டமாக உருவானது. ஆனால், மாவட்டத் தலைமையகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு இன்று வரை அரசின் மானிய விலையில் வீட்டுமனை வழங்கப்படவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



இந்த கோரிக்கையை முன்னிட்டு கடந்த 2015 முதல் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்து வந்தது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி அருகே சேர்வைகாரன் மடம் ஊராட்சியில் 3 ஏக்கர் 97 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. பின்னர் நுழைவு பாதையில் இருந்த தனியார் பட்டா நிலம் தொடர்பான பிரச்சினையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது. அதற்காக தேவையான தொகையை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வழங்கி, அந்த நிலம் ஆளுநர் பெயரில் பதிவு செய்யப்பட்டு, அதன் அசல் ஆவணங்கள் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம், அப்போதைய பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் நேரில் ஒப்படைத்தனர்.



நெல்லை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு இரண்டு மற்றும் மூன்றாம் கட்டமாக வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் இதுவரை ஒருமுறைகூட வழங்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் கேட்டபடி தகுதியான பயனாளர்களின் பட்டியலும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர்கள், ஆட்சி மாறினாலும் இந்த திட்டம் மட்டும் முன்னேறாமல் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.



அப்போது பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக பிரபாகரன், பொருளாளராக சீனிவாசன், துணைத் தலைவராக ராஜேஷ், இணைச் செயலாளராக ஜாய்சன் ஆகியோர் இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்றும், ஆறு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாததால், இந்த நீண்டகால கோரிக்கையை முதல்வர் விஜய் நேரடியாக தலையிட்டு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.