விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



அப்போது, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்கள் வழக்கம்போல் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) திபு, செய்தியாளர்களிடம் தரக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியதுடன், மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கும் ஏடிஎஸ்பி திபுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.



மருத்துவப் பரிசோதனை முடிந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. புறப்பட்டுச் சென்ற பின்னர், ஏடிஎஸ்பி திபு காரில் செல்ல முயன்றபோது, அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் செய்தியாளர்களை அப்புறப்படுத்திய பின்னரே ஏடிஎஸ்பி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவை நேரில் சந்தித்து, ஏடிஎஸ்பி திபுவின் நடத்தைக்கு எதிராக புகார் அளித்தனர்.



புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, "எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நல்லுறவும் பரஸ்பர புரிதலும் அவசியம். அதற்காக மாதம் ஒருமுறை காவல்துறையினரும் பத்திரிகையாளர்களும் கலந்து கொள்ளும் நட்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்" என்று உறுதியளித்தார்.



இந்தச் சந்திப்பில் சண்முகசுந்தரம், காட்சன், மோகன்ராஜ், ராஜா சிதம்பரம், அண்ணாதுரை, முத்துராமன், ராஜன், விஜயகாந்த், ராமச்சந்திரன், மாரிமுத்து, சித்திக், மணிகண்டன், ராஜ், விஜய் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.