பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறை அதிகாரி மிரட்டல் விடுத்ததாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



இதுதொடர்பாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் சக்தி ஆர். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனை உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து வந்தபோது, செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



அப்போது, காவல்துறை ஏ.டி.எஸ்.பி. திபு, தனது காவல் வாகனத்தில் ஏறாமல், பத்திரிக்கையாளர்களை நோக்கி "என்னை விடுங்கள்... அவர்கள் என்ன செய்வார்கள் என்று நான் பார்த்துக் கொள்கிறேன்... வாடா இங்கே..." என்று கடுமையான வார்த்தைகளால் மிரட்டியதுடன், நாக்கைத் துறுத்தி தாக்க முயன்றதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பொது இடங்களில் அமைதியையும் சட்ட ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரி ஒருவரே, தனது கடமையைச் செய்ய வந்த பத்திரிக்கையாளர்களை மிரட்டியிருப்பது காவல்துறையின் அராஜகப் போக்கை வெளிப்படுத்துவதாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.



ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்ததுடன், மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி மீது உயர் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுமானால், மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தலைமையில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.