குழந்தைகளுக்கும் பித்தப்பை கற்கள் ஏற்படலாம் என்பதையும், அதற்கான மேம்பட்ட சிகிச்சைகள் அரசு மருத்துவமனையிலேயே வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகின்றன என்பதையும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (டீன்) மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் (Medical Superintendent/RMO) ஆகியோரின் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்தனர். அதேபோல், அரசு மருத்துவமனைகளுக்கு நவீன லேப்ராஸ்கோபிக் கருவிகளை வழங்கி, குழந்தைகளுக்கும் உலகத் தரத்திலான அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவமனையிலேயே பெறும் வாய்ப்பை உருவாக்கிய தமிழ்நாடு அரசிற்கும் சிறப்பு நன்றி தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம், குழந்தைகளுக்கும் பித்தப்பை கற்கள் (Gallbladder Stones) ஏற்படலாம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேம்பட்ட குழந்தைகள் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதை எடுத்துரைப்பதுமாகும்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 10 வயது சிறுமி ஒருவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், பித்தப்பையில் கற்களும் (Gallbladder Stones), பொது பித்தநாளில் (Common Bile Duct) கற்களும் இருப்பது கண்டறியப்பட்டது.
பெரியவர்களிடம் அதிகம் காணப்படும் இந்த நோய், தற்போது குழந்தைகளிடமும் அதிகரித்து வருகிறது. உடல் பருமன், உணவுப் பழக்க மாற்றங்கள், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் அதிகரித்திருப்பது, சில ரத்த நோய்கள் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளின் பயன்பாடு போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சையின் முதல் கட்டமாக ERCP முறையில் பொது பித்தநாளில் இருந்த கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து, லேப்ராஸ்கோபிக் (Keyhole) அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை பாதுகாப்பாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை முழுமையாக வெற்றியடைந்த நிலையில், குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கு நீடித்த வயிற்று வலி, உணவு உண்ட பின் வயிற்றின் மேற்பகுதியில் வலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் நவீன மருத்துவ முறைகள் மூலம் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.