தூத்துக்குடி முள்ளக்காடு–கோவளம் உப்பளப் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர் களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும், இதுதொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்து வேன் என்றும் அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.



திருச்செந்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற திருமாவளவன், முள்ளக்காடு பகுதியில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களை சந்தித்தார். அப்போது கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட்டால் உப்பு தொழிலுக்கும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:



தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பு தொழில் நடைபெறும் நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, காலங்காலமாக தலைமுறை தலைமுறையாக உப்பு தொழில் செய்து வரும் உப்பளத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. மக்களின் ஒப்புதல் இல்லாமல் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது.



மக்களின் போராட்டத்தை மதித்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உப்பளத் தொழிலை பாதுகாக்க வேண்டும். உப்பு தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்.



மேலும், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம். திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா பேசியது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. முதலமைச்சரை ஒருமையில் பேசுவதும், அவரது பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற பேச்சுகள் திமுக மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.



முன்னதாக திருமாவளவனுக்கு கட்சி நிர்வாகிகள் ஆட்டோ கணேசன், சந்தனகுமார், செந்தூர் அர்ஜுன், முரசு தமிழப்பன், மாரிமுத்து, முருகேஸ்வரி உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். உப்பு உற்பத்தியாளர்கள் சேகர், ரகுபதி, முகேஷ், சண்முகவேல், சிவாகர், பால்ராஜ், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.