இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை சார்பில் கொரில்லா வேடத்துடன் நடத்தப்பட்ட வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.



தூத்துக்குடி மாநகரில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர் களுக்கு ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் தலைமை தாங்கினார். இதில், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளை காவல் துறையினர் பாராட்டி, அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.



அதேநேரத்தில், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு, கொரில்லா வேடம் அணிந்த நபர் மூலம் லேசான அடியுடன் நகைச்சுவையான முறையில் எச்சரிக்கை அளிக்கப்பட்டது. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிர் ஆபத்தை உணர்த்தும் வகையில் இந்த வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.



மேலும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. “தலைக்கவசம் என்பது அபராதத்தைத் தவிர்ப்பதற்காக அல்ல; உயிரைக் காப்பாற்றுவதற்காக” என்ற முக்கியச் செய்தியை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, வாகன ஓட்டிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.



மேலும், தமிழன்டா கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகஜீவன், ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது உள்ளிட்ட சாலைப் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கினார்.