தேசியக்கொடி நாளை முன்னிட்டு, தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் 120-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை (NCC) மாணவிகள் தேசியக் கொடியின் மூவர்ண வடிவில் அணிவகுத்து நின்று தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.
தேசிய தர நிர்ணயக் குழுவின் (NAAC) மறுமதிப்பீட்டில் 'A' தரச் சான்று பெற்றுள்ள தூய மரியன்னை கல்லூரியில், தேசியக்கொடி நாளை முன்னிட்டு தேசிய நலப்பணித் திட்ட (NSS) அலகுகள் 67, 130, 66, 129 மற்றும் தேசிய மாணவர் படை (NCC) இணைந்து "நமது மூவர்ணக் கொடி – இந்தியாவின் பெருமை" என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சியை ஜூலை 22 காலை 8.45 மணிக்கு கல்லூரி திறந்தவெளி அரங்கில் நடத்தின.
இதில், 120-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவிகள் இந்திய தேசியக் கொடியின் மூவர்ண வடிவில் நின்று கண்கவர் நிழற்பட அமைப்பை உருவாக்கினர். தொடர்ந்து, கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. ஷிபனா தலைமையில் மாணவிகள் தேசிய ஒற்றுமை மற்றும் தேசப்பற்று உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸ்ஸி பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேசியக் கொடியின் மகத்துவம், ஒற்றுமை மற்றும் தியாக உணர்வு குறித்து மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, காலை 10 மணி முதல் 11 மணி வரை பாத்திமா அரங்கில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. "இந்திய தேசியக் கொடி – ஒற்றுமை மற்றும் தியாகத்தின் சின்னம்" என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, "தேசியக் கொடியும் நானும்" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி மற்றும் தேசபக்திப் பாடல், கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. ஷிபனா, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எம்.எஸ். எழிலரசி மற்றும் எஸ்.எஸ்.சி. இயக்குநர் அருட்சகோதரி முனைவர் அ. ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய மாணவர் படை (NCC) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தேசிய நலப்பணித் திட்ட (NSS) அலுவலர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.