தேசிய தர நிர்ணயக் குழுவின் (NAAC) மறுமதிப்பீட்டில் 'A' தரச் சான்று பெற்றுள்ள தூத்துக்குடி **தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி)**யில், வாசிப்புப் பழக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தும் சிறப்பு சொற்பொழிவு இன்று நடைபெற்றது. கல்லூரியின் நூலகக் குழு மற்றும் ரீடர்ஸ் கிளப் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.



நிகழ்ச்சியில், விளாத்திகுளத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கரிசல் அன்பழகன், "வாசிப்பு என்னவெல்லாம் செய்யும்" என்ற தலைப்பில் உரையாற்றி, வாசிப்பு மனிதனின் சிந்தனை, படைப்பாற்றல், அறிவு மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பதை எடுத்துரைத்தார்.



மேலும், தூய மரியன்னை கல்லூரி ஆங்கிலத் துறையின் ஆய்வு அறிஞர் அருட்பணி A. தாமஸ், "அறிவினான் ஆகுவது உண்டோ" என்ற தலைப்பில் உரையாற்றி, அறிவைப் பெருக்குவதில் வாசிப்பின் இன்றியமையாத பங்கையும், வாழ்வில் தொடர்ந்து கற்றலின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.



நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஷிபானா, துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி மி. சு. எழிலரசி, சுயநிதிப் பிரிவு இயக்குநர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.



இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை நூலகர் முனைவர் கி. வினிதா, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தா. பிரியங்கா, தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ. அந்தோணிசெல்வி, இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அ. நிர்மலா ஹெர்லி, மனிதவள மேம்பாட்டுத் துறை உதவிப் பேராசிரியர் திருமதி லூ. மா. பிரித்தி, வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் செல்வி முத்து மதுமிதா ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் வாசிப்பு ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு, வாசிப்பின் அவசியம் குறித்த கருத்துகளை ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.