தூத்துக்குடி மாநகராட்சியில் ஆண்டாள் தெரு முதல் குருஸ்புரம் வரை நடைபெற்று வரும் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியின் போது எதிர்பாராத விதமாக மெயின் குடிநீர் குழாய் உடைந்ததால், வடக்கு மண்டலத்தின் 9 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு புதன்கிழமை மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. எனினும், வியாழக்கிழமை முதல் அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல் குடிநீர் வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.



தூத்துக்குடி மாநகராட்சியில் 3-ஆம் மைல் பகுதியிலிருந்து திரேஸ்புரம் கடற்கரை வரை பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. தற்போது ஆண்டாள் தெரு முதல் குருஸ்புரம் வரை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வடபத்திரகாளியம்மன் கோவில் கீழ்புறத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 2 மணியளவில் தோண்டும் பணி நடைபெற்றபோது, எதிர்பாராத விதமாக மெயின் குடிநீர் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டது.



தகவல் கிடைத்தவுடன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, புதன்கிழமை காலை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருடன் ஆலோசனை நடத்தி, உடனடியாக சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.



அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், "மாநகராட்சியில் மொத்தம் 36 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. இதில் வடக்கு மண்டலத்திற்கான 9 மேல்நிலைத் தொட்டிகளுக்கு மெயின் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கலைஞர் டேங்க், எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு, பூபால் ராயர்புரம், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட 9 மேல்நிலைத் தொட்டிகளுக்கு புதன்கிழமை மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.



போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று இரவுக்குள் உடைந்த குழாய் முழுமையாக சரிசெய்யப்பட்டு, வியாழக்கிழமை முதல் அனைத்து பகுதிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும்" என்றார். இந்த ஆய்வின்போது குழாய் ஆய்வாளர் குமார், ஒப்பந்ததாரர் பாலு, மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.