தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., இன்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அச்சுறுத்தல்கள், பொய் வழக்குகள், கைதுகள் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒருபோதும் அடக்க முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு திமுக என்றும் அஞ்சாது" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். கனிமொழி மேலும் கூறுகையில், "பாளையங்கோட்டை சிறைச்சாலை திமுகவுக்கு புதிதான இடமல்ல. 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இருந்த சிறைச்சாலை இதுதான். எனவே, இந்த சிறைக்கு வரும் ஒவ்வொரு திமுகவினரும் இதை பெருமையாகவே கருதுவார்கள். மார்க்கண்டேயனும் அதே மனநிலையில்தான் இருக்கிறார்" என்றார்.
தொடர்ந்து, "பொய் வழக்குகள், கைது மிரட்டல்கள் எதற்கும் திமுக பயப்படாது. சட்டரீதியாக அனைத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், முக்கிய குற்றச்சாட்டுகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், எதிர்க்கட்சியினரை குறிவைத்து கைது செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது" என குற்றம்சாட்டினார்.
மேலும், "கருத்து தெரிவிக்கும் யூடியூபர்கள், சமூக வலைதள இன்ப்ளூயன்சர்கள் உள்ளிட்டோரை கைது செய்யும் நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொள்கிறது. காவல்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது. ஜனநாயக விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தற்போதைய ஆட்சியினரிடம் இல்லை" என்றும் அவர் விமர்சித்தார்.
தமிழ்நாட்டின் உரிமைகள், மாநில நலன் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாடு தொடரும் என்றும் கனிமொழி தெரிவித்தார். மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்க வன்முறையை பயன்படுத்துவதை திமுக ஒருபோதும் ஏற்காது என்றும் அவர் கூறினார்.
அதிமுக-திமுக உறவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது வேறு; அரசியல் ரீதியாக அதிமுகவும், திமுகவும் எந்த காலத்திலும் நெருங்கியதில்லை" என்று விளக்கமளித்தார்.