தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சியும், அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தலைமை வகித்தார். நகர்நல அலுவலர் கணேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளையும், வங்கி மூலம் பெறப்பட்ட கடனுக்கான ஆணைகளையும் வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் அனைவரும் இத்திட்டத்தில் இணைய வேண்டும். முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம், அதன்பிறகு ரூ.25 ஆயிரம், தொடர்ந்து ரூ.50 ஆயிரம் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதுவரை 9,257 விண்ண ப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 7,593 பேருக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டு, வங்கி கடனும் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
சாலையோர வியாபாரிகள் மட்டுமின்றி, வீடுகளில் பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்க வேண்டும். வி.இ. ரோட்டில் கடைகள் அமைக்க அனுமதி கிடையாது. முத்துநகர் கடற்கரையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு 50 வியாபாரிகள் உள்ளனர்.
சாலையோர வியாபாரிகள் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பதற்காகவும், கந்துவட்டி அல்லது அதிக வட்டிக்கு கடன் பெற்று பாதிக்கப்படக்கூடாது என்பதற் காகவுமே மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப் பட்டு, வங்கிகள் மூலம் கடன் பெற்றுத் தரப்படுகிறது.
தூத்துக்குடியில் கேரி பேக்குகள் பயன்பாடு 80 சதவீதம் அளவுக்கு ஒழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 20 சதவீதம் அளவுக்கு கேரி பேக் விற்பனை தொடர்கிறது. பக்கிள் ஓடை உள்ளிட்ட கழிவுநீர் வழித்தடங்களில் கேரி பேக்குகள் தொடர்ந்து தேங்குவதால் மழைக்காலங்களில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களில் பிளாஸ்டிக் மற்றும் நெகிழிப் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தூத்துக்குடியிலும் கேரி பேக்குகளை பயன் படுத்தவோ, விற்பனை செய்யவோ அனுமதிக்கக் கூடாது.
அரை மணி நேரம் கனமழை பெய்தால்கூட தாக்குப்பிடிக்க முடியாத நிலை இருந்த தூத்துக்குடியை, மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மூலம் மாற்றிக் காட்டியுள்ளோம். இதனால் பொதுமக்களும் நிம்மதியாக உள்ளனர்.ம மாநகராட்சி பகுதியில் 53 பூங்காக்கள் உள்ளன. அந்த பூங்காக்களின் முன்பகுதியில் இரண்டு அல்லது மூன்று சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து, பெரிய கடைகளின் முன்பாகவோ, கடைகளின் நுழைவுப் பகுதிகளை மறித்தோ சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்கக் கூடாது.
பழைய பேருந்து நிலையம் முன்பாக சாலையோர வியாபாரிகளுக்கு கடை அமைக்க அனுமதி கிடையாது. அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்துமாறு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.
தூத்துக்குடியில் முடியாதது ஒன்றும் கிடையாது. சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்பதற்காகவே கடந்த நாலரை ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
தொடர்ந்து ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளும், 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு வங்கி கடன் பெறுவதற்கான ஆணைகளும் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், வங்கி அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.