தூத்துக்குடி மாநகராட்சியின் வரி வசூல் மற்றும் விதிமீறல் கட்டிடங்கள் மீதான நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சிறிய தொகை வரி பாக்கி வைத்துள்ள ஏழை, எளிய மக்களின் குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்கும் மாநகராட்சி நிர்வாகம், லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் வரி பாக்கி வைத்துள்ள பெரிய நிறுவனங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.



தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திருமண மண்டபங்கள் மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகவும், பல இடங்களில் வாகன நிறுத்த வசதியே இல்லாமல் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த திருமண மண்டபங்களில் பல லட்சக்கணக்கில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில்வரி நிலுவையில் இருந்தும், அவற்றின் மீது எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



அதேபோல், மாநகரில் செயல்பட்டு வரும் சில தனியார் மருத்துவமனைகள் உரிய அனுமதியின்றி இயங்கி வருவதோடு, அனுமதி அளிக்கப்பட்ட வரைபடத்தை மீறி கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவற்றின் மீது சீல் வைக்கும் நடவடிக்கையோ அல்லது குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையோ மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



இதுமட்டுமல்லாமல், பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களும் லட்சக்கணக்கில், சில இடங்களில் கோடிக்கணக்கில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒரு தனியார் பள்ளி மட்டும் மாநகராட்சிக்கு சுமார் ரூ.23 லட்சம் நிலுவை வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த தொகையை வசூலிக்கவோ அல்லது குடிநீர் இணைப்பை துண்டிக்கவோ மாநகராட்சி நிர்வாகம் முன்வராதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.



மேலும், மாநகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மாநகராட்சியின் உரிய கட்டிட அனுமதி பெறாமலேயே செயல்பட்டு வருவதாகவும், அவற்றுக்கு எந்த அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்பட்டது, குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.



இதற்கு மாறாக, ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே பாக்கி வைத்துள்ள கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, உடனடியாக குடிநீர் இணைப்பை துண்டிப்பதோடு, அதிகாரிகள் மிரட்டும் தொனியில் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஒருபுறம் ரூ.38 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பாக்கி வைத்துள்ள வீடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பாரபட்சத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.



"மாநகராட்சி நிர்வாகம் ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்துக் கொண்டு செயல்படுகிறது. பணம், அதிகாரம், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு ஒரு விதியும், சாதாரண மக்களுக்கு மற்றொரு விதியும் கடைப்பிடிக்கப்படுகிறது" என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



முதலில் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களிடம் நிலுவைத் தொகையை வசூலிக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் கட்டிடங்கள் மீது சட்டப்படி சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகே சிறிய தொகை பாக்கி வைத்துள்ள ஏழை மக்களிடம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



அதேநேரத்தில், மேற்கண்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றும், விதிமீறல்கள் மற்றும் வரி நிலுவைகள் குறித்து வெளிப்படையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.