"தமிழக பட்ஜெட் வெற்றியா, தோல்வியா என்பதை அரசியல் கட்சிகளின் கருத்துக்களால் அல்ல; அதன் பலன் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும்" என்று தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் ஆளுங்கட்சி அதை மக்கள் நலப் பட்ஜெட் என்றும், எதிர்க்கட்சிகள் ஏமாற்றுப் பட்ஜெட் என்றும் விமர்சிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், "இந்த பட்ஜெட்டால் என் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?" என்ற பொதுமக்களின் கேள்விக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.



விலைவாசி குறையுமா, வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா, அரசு மருத்துவமனைகளின் சேவை மேம்படுமா, அரசுப் பள்ளிகளின் தரம் உயரும், விவசாயிகளுக்கு உரிய ஆதரவு கிடைக்குமா, சிறு வியாபாரிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுமா, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுமா போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில்தான் ஒரு பட்ஜெட் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



கைத்தட்டல்களைப் பெறும் பட்ஜெட் நல்ல பட்ஜெட் அல்ல; மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பட்ஜெட்டே சிறந்த பட்ஜெட் என்றும், மக்களின் வரிப்பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



ஒவ்வொரு திட்டத்திற்கும் காலக்கெடு நிர்ணயித்து, அதன் முன்னேற்றம் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து வெளியிட வேண்டும். மேலும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டன, எவ்வளவு நிதி செலவிடப்பட்டது, எத்தனை திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன என்பதற்கான கணக்குகளும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றார்.



சட்டப்பேரவையில் கிடைக்கும் கைதட்டலால் ஒரு பட்ஜெட்டின் வெற்றி தீர்மானிக்கப்படாது. விவசாயியின் வயலுக்கு தண்ணீர் சென்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தால், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைத்தால், குடும்பங்களின் பொருளாதாரச் சுமை குறைந்தால் மட்டுமே அது உண்மையான மக்கள் நலப் பட்ஜெட் எனக் கருத முடியும் என்றும் தெரிவித்தார்.



எனவே, தமிழக பட்ஜெட் 2026-ன் வெற்றி அரசின் அறிவிப்புகளிலும் விளம்பரங்களிலும் அல்ல; அதன் பலன் மக்களின் அன்றாட வாழ்க்கையில் தெளிவாக பிரதிபலிக்க வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.