தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் வரவேற்கத்தக்கது என்றும், அது பெருந்தலைவர் காமராஜரின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



தமிழக அரசின் முதல் பட்ஜெட்டில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் சிறப்பு பள்ளிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி, உணவு, சீருடை, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டமும் மிகவும் வரவேற்கத்தக்கவை.



"கல்வி மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும்" என்ற பெருந்தலைவர் காமராஜரின் உயரிய சிந்தனையை செயல்படுத்தும் வகையில் இந்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கல்வி வளர்ச்சியை முன்னிறுத்தி மாணவர்களின் எதிர்கால நலனுக்காக செயல்பட்டு வரும் முதலமைச்சர் விஜய்க்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



இவ்வாறு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.