தூத்துக்குடி கடற்கரையை ஒட்டிய முள்ளக்காடு, கோவளம், பசுவந்தனை, தன்பாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய அளவிலான உப்பள நிலங்களை கப்பல் கட்டும் தளத்திற்காக கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதுதொடர்பாக உப்பு உற்பத்தியாளர்களுடன் சப்-கலெக்டர் பிரபு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது. இதில் உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.



இந்தப் போராட்டம் தொடர்பாக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களது கோரிக்கைகளுக்கு பரவலான அரசியல் ஆதரவைப் பெறும் நோக்கில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட உப்பு உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்படி ஏற்கனவே நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளை எடுத்துரைத்துள்ளனர்.



தற்போது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தேமுதிக பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்தை சென்னை தலைமை அலுவலகத்தில் உப்பு உற்பத்தியாளர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். இந்தச் சந்திப்பில் உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர், முகேஷ் சண்முகவேல், பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேமுதிக தலைவர் தயாளலிங்கம், முல்லைக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உப்பளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.



தூத்துக்குடி உப்பளங்களை ஏற்கனவே நேரில் பார்வையிட்டுள்ள பிரேமலதா விஜயகாந்த், உற்பத்தியாளர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, அவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து துணை நிற்பதாக உறுதியளித்ததாக உப்பு உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.