சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது நடவடிக்கைகளை தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



பொதுமக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, மக்களிடையே அரசின் மீது அதிருப்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். மக்களின் குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது, அரசு நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்வது, தொகுதி வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்வது உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில், அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதால் அந்தந்த தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை அரசு கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.



தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.



அவதூறான கருத்துகளை யாரேனும் தெரிவித்திருந்தால், அவர்களுக்கு எதிராக சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் கைது செய்து சிறையில் அடைப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. கைது நடவடிக்கைகள் மூலம் கருத்து வேறுபாடுகளை ஒடுக்க முடியாது.



எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கைது மற்றும் சிறை நடவடிக்கைகளை தவெக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.