ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையினரின் நலனில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும், சிறு, நடுத்தர மற்றும் குறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும் எந்தவித பாரபட்சமும் இன்றி அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



இந்தியாவில் பத்திரிகைத் துறையின் சுதந்திரம் மற்றும் பொறுப்புணர்வை பாதுகாக்கும் வகையில் பத்திரிகை தொடர்பான சட்டப்பூர்வ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பல்வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டோர் நாட்டின் நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.



இந்தியாவில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் மற்றும் அரசின் திட்டங்களை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் கொண்டு செல்வதில் ஊடகத் துறையினர் பெரும் பங்காற்றுகின்றனர்.



மத்திய அரசின் அங்கீகார நடைமுறைகளின் கீழ் நாளிதழ்கள், தொலைக் காட்சிகள் மற்றும் பல்வேறு பருவ இதழ்கள் இந்தியா முழுவதும் பல மொழிகளில் செயல்பட்டு வருகின்றன.



அதேபோல், மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் பணியாற்றும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை வழங்கி வருகின்றன. தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அளவில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் வரை அரசின் செய்தித்துறை சார்பில் அடையாள அட்டைகள் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.



தமிழகத்திலும் இதுவரை ஆட்சி செய்த அரசுகள் பத்திரிகை யாளர்களுக்கான பல்வேறு சலுகைகளை வழங்கி வந்துள்ளன. கடந்த ஆண்டு முதல் மாவட்ட அளவில் பணியாற்றும் பத்திரிகை யாளர்களுக்கும் தலைமைச் செயலகத்தில் வழங்கப்படுவது போன்ற வகையில் செய்தித்துறை இயக்குநரின் கையெழுத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் நடைமுறை அறிமுகப் படுத்தப்பட்டது.



எனினும், இந்த நடைமுறை இன்னும் முழுமையாக அனைத்து தகுதியான பத்திரிகையாளர்களையும் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, 2025ஆம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய பத்திரிகையாளர் அடையாள அட்டைகள், பேருந்து பயண அட்டைகள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக பத்திரிகையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது.



தலைமைச் செயலக அளவில் செயல்படும் பல்வேறு குழுக்களில் உள்ள சிலர் விருப்பு, வெறுப்புடன் செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக சிறு மற்றும் நடுத்தர ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் கூறியதாவது:



“இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மத்திய அரசின் அங்கீகார நடை முறைகளின் கீழ் செயல்படும் நாளிதழ்கள், பருவ இதழ்கள், தொலைக்காட்சிகளில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எந்தவித பாரபட்சமும் இன்றி அவர் களுக்குரிய அடையாள அட்டை மற்றும் பேருந்து பயண அட்டை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.



ஆனால், 2025ஆம் ஆண்டு சில குழுக்கள் என்ற பெயரில் தங்களுக்கு வேண்டியவர்கள் பொறுப்புகளில் இருப்பதால், சிறு, நடுத்தர மற்றும் குறு பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன. இது அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.



ஜனநாயகத்தின் நான்காவது தூணை பாதுகாக்கிறோம் என்று கூறும் தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முதலமைச்சர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பல்வேறு சிறிய கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக் கொள்வது அவசியமாக இருக்கும்போது, அரசின் செயல்பாடுகளையும் திட்டங்களையும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லும் ஊடகத் துறையினர் மட்டும் தேவையில்லையா? என்ற கேள்வி இன்று பத்திரிகை யாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



இந்த பழிவாங்கும் மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகள் தமிழகத்தின் பல மாவட்ட ங்களிலும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது அரசின் கடமையாகும்” என்றார்.



மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பத்திரிகைத் துறையினர் முன்வைத்து வரும் முக்கியக் கோரிக்கையான மானிய விலையில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் பத்திரிகையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



சென்னை தலைநகர் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரை தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து ஊடகத் துறை யினருக்கும் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் முறையாகவும், பாரபட்சமின்றியும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.



இந்தக் கோரிக்கைகள் முழுமையாக நிறை வேற்றப்படாத பட்சத்தில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டு, பத்திரிகையாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சி.த. செல்லப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.



6 ஆண்டுகளாக நிறைவேறாத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை



தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவிற் கிணங்க, பத்திரிகை யாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் வழித்தடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



அப்போது பத்திரிகையாளர்கள் மன்றத்தின் தலைவராக இருந்த சண்முகசுந்தரம், செயலாளராக இருந்த பிரபாகரன், பொருளாளராக இருந்த சீனிவாசன், துணைத் தலைவராக இருந்த ராஜேஷ், இணைச் செயலாளராக இருந்த ஜாய்சன் உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சியின் மூலம் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.



ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வழித்தடம் உருவாக்கப்பட்டு, அதற்கான பத்திரப்பதிவு மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரியிடம் தலைவராக இருந்த சண்முகசுந்தரமும், செயலாளராக இருந்த பிரபாகரனும் நேரில் வழங்கியதாக கூறப்படுகிறது.



ஆனால், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 6 ஆண்டுகள் கடந்தும், தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாமல் இருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



விஜய் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் விஜய் அரசு, இந்த நீண்டகாலப் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும், தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், செய்தித்துறை இயக்குநர் மற்றும் செய்தித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



பத்திரிகையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அடையாள அட்டை, பேருந்து பயண அட்டை, வீட்டுமனை உள்ளிட்ட அனைத்து அரசு சலுகைகளும் போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகத் துறையினரின் நீண்டகால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, முதலமைச்சர் விஜய் அரசுக்கு களங்கம் ஏற்படாத வகையில் செய்தித்துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பதே தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



“அரசின் குரலை மக்களிடம் கொண்டு செல்லும் பத்திரிகையாளர்களின் குரலை அரசு எப்போது கேட்கப் போகிறது?” என்ற கேள்வியே தற்போது தமிழக ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.