தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஒட்டநத்தம் கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.சி. சண்முகையா, பி.ஏ., எல்.எல்.பி., தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவரின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரத்தையும் எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.



மேலும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை திமுக தொடர்ந்து ஜனநாயக வழியில் எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒட்டநத்தம் கிளைக் கழகச் செயலாளர்கள் கொண்டல் சுப்பையா, முருகன், முன்னாள் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஈசன் சுரேஷ், புதியம்புத்தூர் கிளைக் கழகச் செயலாளர் பாலகுருசாமி, ஆரைக்குளம் சமுத்திரவேல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டம் முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் கைது நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.